செப மாலைகள்

திவ்ய சிந்தாயாத்திரை மாதாவுக்குச் செபம்

திவ்ய சிந்தாயாத்திரை மாதாவே, திருச்சபை என்னும் கப்பலை ஏந்தும் தாயே, பாவப் பெருங்கடலை நீந்துவோர்க்கு மெய்யான தெப்பமே, என் ஆண்டவருக்குப்பின் எனக்கு ஏக நம்பிக்கையே, நான் அகோர தந்திர வலைகளில் சிக்கிச் சமுசார சாகரத்தில் அமிழ்ந்திரு நெருக்கமான மோட்ச வழியைக் கைக் கொள்ளமாட்டாமல் என் பாவ இச்சைகளோடு போராடப்படும் இத்தருணத்தில் எனக்கு உதவியாக வந்து, வைத்தியனைப் போல் என் பாவ நோயைச் சுகப்படுத்தி, தாயைப் போல ஞான அமுதூட்டித் தைரியம் தந்து, எனது ஞானக் கப்பலாகிய ஆத்துமமானது நித்திய பேரின்ப பாக்கிய மோட்ச கரை பிடிக்கத் தயை செய்தருளும் தாயே. 5பர 5அருள் 5திரி

தோணித் தொழிலாளர் செபம்

சர்வ வல்லவரான சர்வேசுரா! முன்னாள் பெரும் வெள்ளத்தில் தண்ணீரில் மிதந்த நோவாவின் பெட்டகத்தை ஆசீர்வதிக்க நீர் தயை புரிந்தது போல இதோ எம் மன்றாட்டுகளுக்கு இரங்கி இந்த கலம் / கப்பலில் பயணம் செல்பவர்கள் அனைவரையும் உம் வலது திருக்கரத்தால் ஆசீர்வதியும்.

கடல் மேல் நடந்து சென்று பரிசுத்த இராயப்பருக்குச் செய்தது போல உம் வலது கரத்தை நீட்டி இவர்களுக்கும் ஆதரவு கொடுத்தருளும். பரலோகத்தினின்று உம் பரிசுத்த தூதனை அனுப்பி இந்தக் கலத்தில் / கப்பலில் உள்ள யாவையும் சகல விதமான ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும்படிச் செய்யும். சகல எதிர்ப்புகளையும் அகற்றி உம் ஊழியர்களை எப்பொழுதும் அவர்கள் விரும்பும் துறைமுகத்துக்கு பாதுகாப்பாய் சேர்த்து, அவர்கள் தங்கள் தொழில்களை எல்லாம் சரிவரச் செய்து முடித்தபிறகு தக்க காலத்தில் சொந்தக் கரைக்கு மகிழ்ச்சியாய் திரும்பி வந்து சேரத் தயை புரிவீராக! சதா காலமும் ஜீவியரும் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாய் இருக்கிற ஆண்டவரே!

புனித சிந்தாயாத்திரை மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். (பர, அருள்.)

பாவிகளுக்கு அடைக்கலமே செபம்

மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுகளின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியர்களுடைய இராக்கினியான கன்னிகையே தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகின்றேன். பெருமூச்செறிந்து அழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே, என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். – ஆமென்.

இயேசு நாதருடைய திருஇருதயத்துக்கு தங்கள் குடும்பங்களை ஒப்புக் கொடுக்கிற செபம்

இயேசுவின் திரு இருதயமே / கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும், சொல்ல முடியாத உமது நன்மைத் தனத்தையும் நினைத்து நன்றியறிந்து பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம்.

நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திருஇருதய நிழலில் நாங்கள் இளைபாறச் செய்தருளும்.

தவறி எங்களில் யாராவது உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்குக் கிருபை செய்தருளும்.

இதுவுமின்;றி உலகத்திலிருக்கும் எல்லா குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருத்தாப்பியருக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும் அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.

இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே, இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும் அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.

திவ்விய இயேசுவே தலைமுறை தலைமுறையாய் உமது திருச் சிநேகத்தில் ஜீவித்து மரித்து காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும். – ஆமென்.