தூய சிந்தாயாத்திரை மாதா நவநாள் திருப்பலி

வருகைப்பாடல்


குரு : பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே

எல் : ஆமென்

குரு : கடவுளின் அருளை அடைந்த கன்னி மரியின் புதல்வனான இயேசு கிறிஸ்துவின் அருளும், பரம தந்தையின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

எல் : உம்மோடும் இருப்பதாக.

(முன்னுரை)

குரு : அன்புமிக்க சகோதரரே!
இதோ உம் தாய் என்று நம் அன்பு ஆண்டவர் தமது தாயை நமக்கெல்லாம் தாயாகத் தந்திருக்கிறார். இயேசுவின் அன்புத் தாயாக மட்டுமல்ல அவரது ஒப்பற்ற சீடராகவும் விளங்கிய அந்தத் தாய் நம்மை என்றென்றும் தன் அன்பு அரவணைப்பில் காத்து வருகின்றார். நம் சிந்தாயாத்திரை தாய் கடலில் பயணம் செய்வோரின் கலக்கம் போக்கி கரை சேர்ப்பவராக மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பயணத்திலிருக்கும் அனைவருக்கும் வழிகாட்டும் விண்மீனாக, தம் மகனிடமிருந்து கணக்கில்லா வரங்களைக் கேட்டுத் தருபவராக இருக்கிறார். நம் அன்றாட அலுவல்களுக்கிடையிலும், அல்லல்களுக்கிடையிலும் ஆண்டவரைத் தேடும் மக்களாக இந்த அன்புத் தாயின் வழி நடப்பவர்களாக வாழ இறைவனை மன்றாடுவோம். இந்த நவநாள் வழிபாட்டில் தகுதியான முறையில் பங்கெடுக்க நமது குற்றம் குறைகளுக்காக மனம் வருந்துவோம்.

(அமைதி)

குரு : சென்ற இடமெல்லாம் நன்மையே புரிந்த இறைவா! புனித சிந்தாயாத்திரை தாயின் பரிந்துரையில் பொது வாழ்விலே எண்ணற்ற நன்மைகளை தந்துள்ளீர். ஆனால் உமது மேலான நன்மைகளை நாங்கள் பல வேளைகளில் மறந்து வாழ்ந்திருக்கின்றோம். உமது அன்பை மறந்ததற்காக மன்னிப்பு வேண்டுகிறோம். ஆண்டவரே இரக்கமாயிரும்.

எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்

குரு : எம்மீது கொண்ட அன்பிற்காக உம்மையே கொடையாகக் கொடுத்தவரே. புனித சிந்தாயாத்திரை தாயின் இறைப்பற்றும், பிறரன்பும் உமக்கு விருப்பமாயிருந்தன. நாங்கள் உமது உருவையும், சாயலையும் எமது அண்டை அயலாரில் காண மறந்திரக்கிறோம். அதற்காக மன்னிப்பு வேண்டுகிறோம். கிறிஸ்துவே இரக்கமாயிரும்.

எல் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்.

குரு : எம் வாழ்வின் ஊற்றே இயேசுவே, உமக்காக நிறைவேற்ற தன்னையே முழுவதுமாக கையளித்த அன்னை மரியாவின் அன்பு பக்தர்களாகிய நாங்கள் எமது தன்னலத்தாலும், தீய எண்ணங்களாலும் அழிவுப் பாதையிலே நடந்திருக்கிறோம். ஆண்டவரே இரக்கமாயிரும்.

எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்.

குரு : எல்லாம வல் இறைவன்நம்மீது இரக்கம் வைத்து நம் பாவங்களை மன்னித்து நம்மை முடிவிலலாத வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக

எல் : ஆமென்.


இறைபுகழ்ச்சி

குரு : கடவுள் தம் ஒரே மகனையே உலகிற்கு அனுப்பியதன் மூலம் நம்மீது அவர் கொண்ட அன்பை வெளிப்படுத்தினார். அந்த மகனை தன் கருவில் தாங்கி இவ்வுலகிற்கு ஈந்தவன் அன்புத்தாய் மதியாள். நமது கடல் பயமும் வாழ்க்கைப் பயணமும் நலமாக இருக்க நமக்காகப் பதரிந்து பேசும் புனித சிந்தாயாத்திரை மாதா வழியாக இறைவனைப் புகழ்ந்து போற்றுவோம்.

(அமைதி)

குரு : எங்களை அருள் வாழ்வில் நடத்திச் செல்லவும், துன்பத்திலும், சோதனையிலும் அலைகழிக்கப்படும் போது எமக்காகப் பரிந்து பேசும் புனித சிந்தாயாத்திரை மாதாவே உம்மைப் புகழ்கிறோம்.

எல் : திவ்ய சிந்தாயாத்திரை மாதாவின் புகழ்ச்சியும் மகிமையும் உமக்கே இறைவா.

குரு : கானாவூர் திருமண வீட்டில் செய்தது போல எங்கள் குறைகளையும், தேவைகளையும், கவலைகளையும் இறைவனிடம் எடுத்துக்கூறி நலன்களைப் பெற்றுத் தருகின்ற புனித சிந்தாயாத்திரை மாதாவே உம்மைப் புகழ்கிறோம்.

எல் : திவ்ய சிந்தாயாத்திரை மாதாவின் புகழ்ச்சியும் மகிமையும் உமக்கே இறைவா.

குரு : நாங்கள், இறையன்பு, பிறரன்பு, எளிமை. தாழ்ச்சி முதலிய நற்பண்புகளில் வளர்ந்து இயேசுவின் சீடர்களாக வாழ்ந்து காட்ட தூண்டுதலாய் இருக்கும் புனித சிந்தாயாத்திரை மாதாவே உம்மைப் புகழ்கிறோம்.

எல் : திவ்ய சிந்தாயாத்திரை மாதாவின் புகழ்ச்சியும் மகிமையும் உமக்கே இறைவா.

குரு : பஞ்சம், பசி வேளைகளிலும், நோய், நொடி வாட்டுகிறபோதும், இயற்கைச் சீற்றத்தின் போதும் எங்கள் கண்ணீரைத் துடைக்க எமக்காகப் பரிந்து பேசும் புனித சிந்தாயாத்திரை மாதாவே உம்மைப் புகழ்கிறோம்.

எல் : திவ்ய சிந்தாயாத்திரை மாதாவின் புகழ்ச்சியும் மகிமையும் உமக்கே இறைவா.

குரு : சோர்வுற்ற நேரத்திலும் சோதனைக் காலங்களிலும் எங்களைப் பரிவன்போடு ஆதரித்து உறுதுணையாக இருந்து காக்கின்ற புனித சிந்தாயாத்திரை மாதாவே உம்மைப் புகழ்கிறோம்.

எல் : திவ்ய சிந்தாயாத்திரை மாதாவின் புகழ்ச்சியும் மகிமையும் உமக்கே இறைவா.


விசுவாசிகளின் மன்றாட்டு

சகோதர சகோதரிகளே புனித சிந்தாயாத்திரை மாதா வழியாக நலன்களையும், வளங்களையும் பெற்றுக் கொண்டவர்கள் ஏராளம். இந்த அன்னையை தஞ்சமென நாடிவரும் திருப்பயணிகளான நமக்கும் பிறருக்கும் இறைவனின் அருளும் ஆசீரும் இடையறாது கிடைக்க மன்றாடுவோம்.

1. இறைவா, பயணமாகும் உமது திருச்சபை அன்பு, அமைதி, ஒற்றுமை, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் முதலிய பண்புகளால் ஒளிபெற்று நற்செய்திப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், எம் திருத்தந்தை, எம் மறைமாவட்ட ஆயர், குருக்கள், துறவறத்தார் பொதுநிலையினர் அனைவரும் கிறிஸ்துவின் போதனையைப் பின்பற்றி வாழவும் நற்செய்திப் பணிக்காக அயராது உழைத்திட அருள் புரிய வேண்டுமென்று.... இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. எம் பாரத நாட்டையும் அதனை ஆண்டு நடத்தும் தலைவர்களையும் ஆசீர்வதித்து அவர்கள் சாதி, மதம், மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களின் நலனுக்காக உழைத்திட அருள்புரிய வேண்டுமென்று......

எல் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. உமது உருவிலும், சாயலிலும் படைக்கப்பட்ட மக்கள் பலர் எண்ணற்ற மனக்குறைகளாலும், துன்பத்தாலும், வாழ்வின் சோகத்தாலும் அலைக்கழிக்கப்பட்டு அமைதியின்றி தவிக்கின்றனர். அவர்களைத் தேற்றி அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வாழ்வளித்து காக்க வேண்டுமென்று.....

எல் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. கரை சேர முடியாத கலம் போல எம் குடும்பங்களில் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் இளம் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகளை நீர் ஆசீர்வதித்து அவர்களுக்கு விரைவில் நல்ல எதிர்காலம் அமைந்திட அருள்புரிய வேண்டுமென்று....

எல் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

5. படித்துப் பட்டம் பெற்றும் வேலையின்றி எந்தத் திசையில் எப்படி வாழ்வது என்ற குழப்பத்தில் இருக்கும் எம் இளம் சகோதரர்கள் வேலை வாய்ப்புப் பெற்று தம் வாழ்க்கையில் முன்னேற்றம் காண அருள்புரிய வேண்டுமென்று.....

எல் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

6. மன வருத்தத்தினாலும் பிரிந்து வாழும் கணவர் மனைவியர் மற்றும் குடும்பத்தினர் மீண்டும் இணைந்து, ஒற்றுமையோடும் அன்புறவோடும் வாழ அருள் புரிய வேண்டுமென்று....

எல் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

7. திருப்பயணிகளாக புனித சிந்தாயாத்திரை தாயைத் தேடிவந்து இந்த வழிபாட்டில் பங்குபெறும் எங்கள் அனைவரையும் அன்போடு காத்து எங்களது தொழில் முயற்சிகளையும் ஆசீர்வதித்து வளமான வாழ்வை வழங்கவேண்டுமென்று.....

எல் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

• விண்ணப்பங்கள் வாசித்தல்
(நமது தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடுவோம்.)


நன்றி

குரு : எல்லாம் வல்ல இறைவன் தமது மீட்புத் திட்டம் நிறைவேற தேர்ந்துகொண்ட நம் தாய் புனித சிந்தாயாத்திரை மாதாவின் வழியாக நமக்குச் செய்த அனைத்து நன்மைகளையும் நினைத்து நன்றி கூறுவோம்.பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நம்பிக்கையோடும், ஒன்றுபட்ட மனநிலையோடும் பயணமாகும் எம் திருச்சபையையும் அதன் தலைவர்களையும் நீர் பேணிக் காப்பதற்காக.

எல் : ஆண்டவரே, சிந்தாயாத்திரை அன்னை வழியாக உமக்கு நன்றி கூறுகிறோம்.

குரு : அன்னை மரியாளைப் போல நாங்களும் விசுவாச ஒளியில் நடந்திட இறைவார்த்தை, அருட்சாதனங்கள் வழியாகத் துணைபுரியும் உமது அன்பிற்காக.....

எல் : ஆண்டவரே, சிந்தாயாத்திரை அன்னை வழியாக உமக்கு நன்றி கூறுகிறோம்.

குரு : பல்வேறு உடல் நோய்களாலும் மனவேதனைகளாலும் கவலை கண்ணீராலும் துயரப்பட்டோருக்கு உமது அருள் ஆதரவைக் கொடுத்து பராமரித்து கருணைக்காக...

எல் : ஆண்டவரே, சிந்தாயாத்திரை அன்னை வழியாக உமக்கு நன்றி கூறுகிறோம்.

குரு : உணவில்லாமல், உற்றார் உறவினர் இல்லாமல், வீடில்லாமல், வேலை இல்லாமல் வாடிய மக்களுக்கு நல்ல வழிகாட்டி நலன்கள் தந்து காத்த பேரன்பிற்காக....

எல் : ஆண்டவரே, சிந்தாயாத்திரை அன்னை வழியாக உமக்கு நன்றி கூறுகிறோம்.

குரு : எங்கள் குடும்பங்களையும், எங்களது தொழில் முயற்சிகளையும் ஆசீர்வதித்து அருள்வளமும், பொருள் வளமும் தருகின்ற உமது கனிவான பராமரிப்பிற்காக.....

எல் : ஆண்டவரே, சிந்தாயாத்திரை அன்னை வழியாக உமக்கு நன்றி கூறுகிறோம்.

• நன்றியறிதல் வாசித்தல்
(தனிப்பட்ட முறையில் நாம் பெற்றுக் கொண்ட நலன்களுக்காக புனித சிந்தாயாத்திரை மாதா வழியாக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.)


புனித சிந்தாயாத்திரை மாதாவை நோக்கி மன்றாட்டு

எங்கள் அன்பான அன்னையே! சிந்தாயாத்திரை மாதாவே! உமது எழில் வதனத்தைக் காணவும், உம்மைப் போற்றி புகழவும் உமது அருள் துணையை வேண்டவும் உமது திருக்கோவிலைத் தேடி வந்துள்ளோம்.உம் பிள்ளைகளாகிய எங்களைக் கைவிடாதேயும் தாயே! உம் திருக்கரத்தில் நீர் எந்தியிருக்கும் உமது திருமகன் இயேசுவே எங்களையும் உமக்கு பிள்ளைகளாகத் தந்துள்ளார் என்பதை எண்ணி உரிமையோடு உம்மை வேண்டுகிறோம்.

உலகமாகிய கடலிலே அலைமோதும் படகுபோல் எங்கள் வாழ்க்கையின் பல்வேறு கவலைகளாலும் சுமைகளாலும் நோய்களாலும் அலைகழிக்கப்படுகிறோம். நாங்கள் பயணம் செய்யும் இந்த உலகில் எந்தவிதமான ஆபத்துக்களும் இன்றி விண்ணகத்துறை சேர அருள்புரியும். கடலிலே எழும் காற்றிலும், புயலிலும், கொடிய அலைகளிலும் சிக்குண்டு எங்கள் தோணிகளும், படகுகளும் தத்தளிக்காமல், கடல் பயணம் செய்த உமது திருமகன் இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி எல்லா மரக்கலங்களையும் அவைகளில் பயணம் செய்வோரையும் பாதுகாத்தருளும்.அம்மா சிந்தாயாத்திரைத் தாயே! அன்று திபேரியாக் கடலில் நடந்த அற்புதத்தைப் போல் எங்கள் எளிய படகுகளையும் மீன்களால் நிரப்ப உம் திருமகனை மன்றாடும். நீர் கையில் ஏந்தியுள்ள கப்பலைப்போல் எங்கள் ஒவ்வொருவரின் குடும்பக்கப்பலையும் உமது அரவனைப்பில் வைத்துப் பாதுகாத்தருளும்.

அன்னைக்குரிய பாசத்தோடு எங்களையும் எங்கள் குழந்தைகளையும் எங்கள் முத்து நகரில் வாழும் எல்லா மக்களையும் நல்ல உடல் நலத்தோடும் ஆன்மீக வளத்தோடும் பொருளாதார செழிப்போடும் வாழ வைத்தருளும். எங்கள் இளைய தலைமுறையினரும், ஆபத்தான வழிகளில் சென்று வாழ்க்கைப் படகை சீரழித்துவிடாமல் நல்வழி காட்டியருளும் அம்மா.திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் மக்களின் தொழில் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற அருள்புரியும். நோவாவின் பேழையை வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாத்த இறைத்தந்தையின் பரிவிரக்கத்தை பாவிகளாகிய எங்களுக்கும் என்றென்றும் பெற்றுத்தாரும் தாயே – ஆமென்.


நோயாளிகள் மந்திரிப்பு

குரு : ஆண்டவரே உம்முடைய படைப்புகள் யாவும் உம்மைப் புகழுக.

எல் : உம்முடைய புனிதர்கள் உம்மை வாழ்த்துவார்களாக

குரு : புனித சிந்தாயாத்திரை அன்னையின் புகழையும், அவரது மேலான பெயரையும்.

எல் : நாங்கள் என்றென்றும் வாழ்த்துகின்றோம். போற்றுகின்றோம்.

குரு : சிறிதளவும் குறையின்றி எம்மைக் காத்துவரும் புனித சிந்தாயாத்திரை தாயே!

எல் : கொந்தளிக்கும் அலைகளிடமிருந்தும், கொடிய துன்பங்களிலிருந்தும் எங்களைக் காத்தருளும்.

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல் : உம்மோடும் இருப்பாராக.

குரு : செபிப்போமாக!
இரக்கம் நிறைந்த ஆண்டவரே! ஆறுதல் அளிக்கும் இறைவா. புனித கன்னி மரியை உம் திருமகனுக்கு தாயாக தேர்ந்தருளினீரே! இறைவார்த்தையை வாழ்வாக்கி துன்புற்றோரின் கண்ணீரெல்லாம் துடைத்த அந்தத் தாயின் அடைக்கலத்தைத் தாழ்மையோடும் நம்பிக்கையோடும் தேடி வந்திருக்கின்ற இம்மக்களை கண்ணோக்கும். அன்று இராயப்பரின் மாமியாரைச் சந்தித்து உடல் நலம் அருளியது போல இவர்களையும் சந்தித்துத் தொட்டு குணமாக்கி இவர்களோடு தங்கி இவர்களுக்குத் துணையாயிரும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

குரு : இறையருளால் நிறைந்த பாத்திரமான புனித சிந்தாயாத்திரை அன்னையின் பரிந்துரையால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும் உங்களைப் காப்பாற்ற உங்களுக்குள்ளும் உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும் உங்களுக்கு காவலாயிருக்க உங்களுக்குப் பின்னும் உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக!.

எல் : ஆமென்

குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதித்து அனைத்து நோயினின்றும் விடுவிப்பாராக.

எல் : ஆமென்.


சிந்தாயாத்திரை மாதா பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே கிருபையாயிரும்!
சுவாமி கிருபையாயிரும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!
கிறிஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் நன்றாகக் கேட்டருளும்!
பரமண்டலங்களிலே இருக்கின்ற பிதாவாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!
பரிசுத்த திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி, இரட்சியும் சுவாமி!
அர்ச்சியசிஷ்ட மரியாயே!
சீவியர்களுடைய மாதாவாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
பரலோக ரோஜா நந்தவனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
உம்மை நம்பினவர்களுக்கு ஞானச் சீவிய ஊற்றான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
செயமடைவதற்குத் திருவிருதான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
ஞானத்தின் சாயலான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
செபதியானத்தின் திரு ஆலயமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
அடைக்கலப் பேழையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
உம்மை நம்பினவர்களுக்குத் துணையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
எருசலேமின் மகிமைக் கிரீடமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
விடியற்காலையின் நட்சத்திரமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
சந்திரனைப் போல நிறைந்த அழகுள்ளவளான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
சூரியனைப் போல் பிரகாசிக்கின்றவளான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
சமுத்திரத்தின் நட்சத்திரமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
சகல தீவினைகளிலேயும் நின்று, எங்களை இரட்சிக்க மன்றாடுகிற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
எரிந்தும் வேகாத முள்மரமாக மோசேஸ் கண்ட திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
சாலமோன் என்கிறவருடைய பத்திராசனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
தங்கமயமாயிலங்கும் உப்பரிகையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
பசித்திருக்கிறவர்களுடைய ஜீவனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
வேதம் அடங்கிய பெட்டகமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
முத்திரையிடப்பட்ட ஊற்றான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
பஞ்சம் படை நோய்களிலே ஆதரவான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
சீவியஞ்சுரக்கும் கிணறான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
அலைகடலில் திசை தப்பித் தேறுதலில்லாமல் திகைப்பவர்களுக்கு நல்வழியும் கரையுமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
கப்பலேறித் தேசாந்திரியாயிருக்கிறவர்களை கைதூக்கி இரட்சித்துக் கொண்டு வருகிற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
பரதேசமாகிய இவ்வுலகமெனும் ஆழியில் நின்ற ஆத்துமாக்களுக்குப் பரலோகக் கரையை காண்பிக்கும் வெளிச்ச வீடாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
ஏழைகளுக்கு இரங்கும் தாயாரான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
உத்தரிப்பு ஸ்தலத்திலே இருக்கிற தாயாரான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
உத்தரிப்பு ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்களுக்கு இளைபாற்றியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
பராபரனின் பூஜ்ஜிய தேவாலயமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
யாக்கோப் என்பவர் கண்ட ஏணியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
சகல புண்ணியங்களிலும் ஞானப் கண்ணாடியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
சூரியனை ஆடையாய்த் தரி;த்த பரம ஸ்தீரியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
சந்திரனைப் பாதக் குடறாக அணிந்த தயாபரியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
தெய்வீகத்தின் ஞானக்சுடராய் விளங்குகின்ற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
உம்மை மன்றாடுகிறவர்களுக்கு அடைக்கல அன்னையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்கள் பிரார்த்தனையை தயவாய் கேட்டருளும், சுவாமி!
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய யேசுவே – எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

முதல் : இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பேறுபெற்றவர்களாக இருக்கத் தக்கதாக.

துணை : திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


செபிப்போமாக

நித்திய பிதாவாகிய சர்வேசுரா, முத்திப்பேறு பெற்ற பரிசுத்த கன்னி மரியாயைக் குறித்து மன்றாடுகிற நாங்கள் அந்த உத்தம நாயகியின் வேண்டுதலினால் இந்தப் பரதேசயாத்திரையில் நேரிடுஞ் சகல ஆபத்துக்களிலும் நின்று காக்கப்பட்டு, சத்திய சன்மார்க்கத்திலே தவறுதலின்றி நடந்து நன்மரணத்தையும் நித்திய மோட்சானந்த பாக்கியத்தையும் கண்டடைய அனுக்கிரகம் பண்ணியருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்துக் தந்தருளும். ஆமென்.


பாடல்

அருள் நிறை மரியே மாதாவே – உம்
அடைக்கலம் தேடியே வந்தோமம்மா
உம்மிடம் வேண்டுவோர் எவரையும் - நீர்
ஒரு போதும் கைவிட்ட தில்லையம்மா (2)
                                          I
கரம் கூப்பி வந்தோம் உம் திருப்பாதத்தில்
கருணையின் நிறைகுடம் ஆனவளே (2)
கனிவோடு எம்மை ஏற்றிடுவாய்
கன்னியர்க்கெல்லாம் அரசி நீயே (2)
                                         II
கவலையும் கண்ணீரும் பெருமூச்சுமாய்
அலையும் நாங்கள் உம் மக்களம்மா (2)
துன்பங்கள் தீர்ந்திடும் வேளையிலே
துணை தந்து காத்திட வேண்டுமம்மா (2)